நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் தினமாக கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அந்த நாளில் படிக்கிற வயதிலுள்ள குழந்தைகளைப் பணிக்கு அமர்த்தக் கூடாது என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், காவல் துறையினர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் உறுதிமொழியை வாசிக்க அங்கு கூடியிருந்தவர்கள் கைகளை நீட்டியபடி அதனை ஏற்று வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதில், கல்வி கற்கும் வயதிலுள்ள குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி உரிமையை வழங்குவோம், 14 வயதுக்குள்பட்டவர்களை எந்தப் பணியிலும் ஈடுபடுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம், குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கு முயன்றவரை பாடுபடுவோம், குழந்தைத் தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.