ஈரோடு: காஞ்சிகோயில் பேரூராட்சியில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் வெற்றிடைந்து 10ஆவது வார்டு உறுப்பினராகவும் கவுன்சிலராகவும் உள்ள அன்பரசி என்பவர், தனது வார்டிற்கு போதிய நிதி பேரூராட்சியில் கிடைக்காததால் தனது சொந்த செலவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கழிவறை வசதி உள்ளிட்டவைகளை அமைத்து வருகிறார்.
முன்னதாக, இவர் தேர்தல் பிரசாரத்தின்போது, 'சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத இப்பகுதியில் நான் வெற்றி பெற்றால் சாலை வசதிகளை உடனடியாக நிறைவேற்றுவேன்' என தேர்தல் வாக்கு அளித்திருந்தார். இதனிடையே, இது மாதிரியான பல திட்டங்களுக்காக இவர், பேரூராட்சியில் நிதி கோரிக்கை வைத்தும் அவை கிடைக்காத நிலையில் தனது சேமிப்பிலிருந்த ரூ.30 லட்சத்தைக் கொண்டு தனது வார்டு பகுதியில் இன்று (செப்.9) கான்கிரீட் சாலை அமைத்துள்ளார்.
தவிர காஞ்சிகோயில் பேருந்து நிறுத்தம் பகுதியில் செயல்படும் வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்கள், பேருந்துக்காக நான்கு சாலை சந்திப்பில் காத்து இருக்கும் பொதுமக்களுக்கு கழிப்பறை வசதிகள், பழைய தெரு விளக்குகளுக்குப் பதிலாக 20 சோலார் மின் விளக்குகளை அமைத்து கொடுத்துள்ளார். அப்பகுதியில் உள்ள உயர் தண்ணீர் தொட்டியிலிருந்து அடிக்கடி நிரம்பிய நீர் வெளியேறி வீணாவதைத் தடுக்கவும் சென்ஸார் முறையில் தானாக செயல்படும் வசதியைக் கொண்டு அதனைத் தவிர்க்கவும் வழி செய்துள்ளார்.
அத்துடன் தனது வார்டு பகுதியிலுள்ள மக்களின் புகார்களை உடனே பெற்று நடவடிக்கை எடுக்கும் விதமாக வாட்ஸ் அப் குரூப் ஒன்றையும் ஏற்படுத்தி அதில் வரும் புகார்கள் மீது உடனடியாக தீர்வும் கண்டு வருகிறார், இப்பகுதியின் இளம் வார்டு உறுப்பினர் அன்பரசி. இதன்மூலம் அவரது சேவையை அப்பகுதியினர் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் இயங்கிய போலி மதுபான ஆலை - கும்பகோணத்தில் பிடிபட்ட வாகனம்