பெண்கள் நலத்திட்டத்தின் ஒருபகுதியாக கர்ப்பிணி பெண்களுக்கு பிறந்த வீட்டினரால் நடத்திவைக்கப்படும் வளைகாப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தபடுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று 280 கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
அப்போது பேசுகையில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டுவருவதாகவும், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி மட்டுமல்ல பிரசவத்திற்கான செலவுகளையும் அரசு ஏற்றுக்கொண்டு நிதி உதவிகளை வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் முதன்முதலாக தொட்டில் குழந்தை திட்டம் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்த அமைச்சர், நகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும் அவர், ரூ.380 கோடி செலவில் சித்தோடு - கோபிசெட்டிப்பாளையம் நான்கு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தவுள்ளது எனத் தெரிவித்தார்.