சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் மலைப்பாதையில் நேற்று மாலை 6 மணி முதல் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. 6 மணியிலிருந்து 9 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் ஜீப் கார் போன்ற வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிமுதல் காலை 6 மணிவரை பண்ணாரி சோதனைச்சாவடி மூடப்பட்டது. தமிழ்நாடு கர்நாடக இடையே பயணிக்கும் அரசுப் பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
போக்குவரத்து தடை காரணமாக இரு மாநிலங்களிடையே பயணிக்கும் சரக்கு உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் பண்ணாரியிலிருந்து புதுகுய்யனூர் வரை 4 கிமீ தூரம் வரை காத்திருந்தன.
அதேபோல மற்றொரு மாநில சோதனைச் சாவடியான காரப்பள்ளம் முதல் கர்நாடக பகுதியான புளிஞ்சூர் சோதனைச்சாவடி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
காலை 6 மணிக்கு பண்ணாரி சோதனைச்சாவடி திறக்கப்பட்டு வாகன போக்குவரத்து தொடங்கியது. பண்ணாரி வனத்தின் வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் மெதுவாகப் புறப்பட்டுச் சென்றன.
விடிய விடிய காத்திருக்கும் வாகன ஓட்டிகள்
காலை 6 மணிக்குத் தொடங்கிய வாகன போக்குவரத்து நான்கரை மணி நேரமாக தற்போது வரை நீடிக்கிறது. தற்போது மேலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பண்ணாரியிலும் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மாநில எல்லையான காரப்பள்ளத்திலும் காத்திருக்கின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். விடிய விடிய காத்திருந்து பகலில் 5 மணி நேரம் என சுமார் 17 நேரமாகப் பண்ணாரியில் காத்திருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தற்போது நிலவரப்படி பண்ணாரி புதுகுய்யனூர் முதல் கர்நாடக மாநில புளிஞ்சூர் வரை சுமார் 30 கிமீ தூரம் வரை வாகனங்கள் நிற்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். அரசுப் பேருந்துகளும் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டதால் கர்நாடகா செல்லும் தமிழ்நாடு, கர்நாடக அரசுப் பேருந்துகள் காலதாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
அதேபோல காராப்பள்ளம், திம்பம் மலைப்பாதையில் காத்திருந்த வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியில் கட்டணம் வசூலித்த ரசீதை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை நேரம் நீட்டிப்பு