ஈரோடு: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியில் இருந்து, கோழிகள் பாரம் ஏற்றுவதற்காக பல்லடம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்த அமருல்லா என்பவர் ஓட்டினார். லாரியில் பாரம் ஏற்றும் தொழிலாளர்கள் நான்கு பேர் உடன் இருந்தனர்.
லாரி 26 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கம்பியை உடைத்துக் கொண்டு வனப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் எதிர்பாராதமாக விதமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுனர் உட்பட ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது.
அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காயம் பட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர் பெட்ரோல் குண்டு வெடிப்புகளுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்...