கர்நாடக மாநிலம், மைசூர் பகுதியில் இருந்து தக்காளிப் பழங்கள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, இன்று (ஜூன்.07) காலை சத்தியமங்கலம் வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த லாரியை காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த பாசில் ரயான் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் என்ற பகுதியில் லாரி சென்றபோது சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள வாழைத் தோட்டத்திற்குள் தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். லாரி வாழைத் தோட்டத்திற்குள் தலைகீழாகக் கவிழ்ந்ததால் லாரியில் இருந்த இரண்டு டன் தக்காளிப் பழங்கள் கீழே சிதறி சேதமடைந்தன.
தகவலறிந்து அங்கு வந்த பவானி சாகர் காவல் துறையினர், லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பவானிசாகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.