ஈரோடு: திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்து காரணமாக வன விலங்குகள் அடிபட்டு உயிரிழந்தன.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில், ஏற்கனவே 2019ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் இரவு நேரப் போக்குவரத்திற்குத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவிட்டது.
அதன்படி, நாளை (பிப்ரவரி 10) மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையில் வாகன போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் அறிவிப்பு
இதேபோல திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்திற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. இந்த நிலையில் நாளை முதல் காலை திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்திற்குத் தடைவிதிப்பதைக் கண்டித்து தமிழ்நாடு-கர்நாடக எல்லையிலுள்ள பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் தாளவாடி மலைக்கிராம மக்கள் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
தாளவாடி வட்டத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் வசிக்கும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நாள்தோறும் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்துசெல்வது வழக்கம்.
தற்போது திம்பம் மலைப்பாதையில் இரவு நேரப் போக்குவரத்திற்குத் தடைவிதிப்பதன் மூலம் தாளவாடி மலைப்பகுதி, ஆசனூர் மலைப்பகுதி, கேர்மாளம் ஆகிய மலைப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் தனித்தீவாக மாறும் இடர் உள்ளதாக மலைக்கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு
இது தொடர்பாக அப்பகுதியில், அனைத்து அரசியல் கட்சியினர், வியாபாரிகள், விவசாய சங்கங்கள், பொதுமக்கள் அடங்கிய கூட்டமைப்பினர் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஆலோசனை மேற்கொண்டு நாளை பண்ணாரியில் தாளவாடி மலைப் பகுதியைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முடிவுசெய்யப்பட்டுள்ளது எனப் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தாளவாடியில் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் போராட்டம் குறித்த அறிவிப்பு அறிவிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: நீட் விலக்கு விவகாரம்: ஆளுநருக்கு பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் கண்டனம்!