தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. பெரிய கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவைகளை கடந்த 26ஆம் தேதிமுதல் மறு உத்தரவு வரும் வரையில் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
இதில் பெரிய கடைகளைக் கணக்கெடுத்து மூடுவதில் மாவட்ட நிர்வாகத்தினருக்குச் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட சில மாவட்ட ஆட்சியர்கள் எத்தனை சதுர அடி இருந்தால் அதை பெரிய கடைகளாகக் கருதுவது என்று மாநில அரசிடம் விளக்கம் கேட்டிருந்தனர்.
சுமாராக மூன்றாயிரம் சதுர அடிக்கு மேல் இருக்கும் கடைகளைப் பெரிய கடைகளாகக் கருதி அவற்றை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், கோபிசெட்டிபாளையம் பகுதியில் கோட்டாட்சியர் தலைமையில் நகராட்சி அலுவலர்கள், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் ஆகியோர் ஒன்றிணைந்து வாகன பேரணியில் ஈடுபட்டு கடைகளை அடைக்கச்சொல்லி ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். மேலும் 3 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் உள்ள அடைக்கப்படாத கடைகளுக்குச் சென்று எச்சரிகை கொடுத்து கடைகளை மூடினர்.
தங்கள் கடைகள் மூன்றாயிரம் சதுர அடி இல்லை என வாதியிடும் கடை உரிமையாளர்கள் முன்னிலையில், நில அளவையர்களைக் கொண்டு கடைகளை அளவீடு செய்து காண்பித்து கடைகளை மூடினர்.
சிறிய கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இதை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படுவதுடன், உரிமம் ரத்துசெய்யப்படும் என எச்சரிகைவிடுத்துள்ளனர். அப்பகுதியில், விதிகளை மீறி செயல்பட்ட ஒரு துணிக்கடைக்குச் சீல்வைத்தனர்.
சில பெரிய கடைகள் முன்புறம் மூடிவிட்டு, பின்புறமாக வியாபாரம் செய்வதாகவும், இதனால் தொற்று பரவும் அபாயாம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகையோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.