கரோனா தொற்று பரவல் காரணமாக ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படாத நிலையில் தற்போது மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாளை முதல் ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளன. காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மதுபான கடைகளில் மதுபிரியர்கள் கூட்டமாக முண்டியடித்து மதுபானங்களை வாங்குவதை தவிர்க்க சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் முன்பு குச்சிகள், கம்புகளை பயன்படுத்தி தடுப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
மதுபான கடைக்கு வரும் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி விட்டு நின்று மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் வகையில் தடுப்பு கட்டும் பணி மேற்கொண்டுள்ளதாக டாஸ்மாக் அலுவலர்கள் தெரிவித்தனர்.