ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்றுவருகின்றனர். 10ஆம் வகுப்பில் மட்டும் ஏ, பி, சி என மூன்று வகுப்புகளாக பிரித்து ஒவ்வொரு வகுப்பிலும் 30 மாணவர்கள் உள்ளனர். 10ஆம் பி பிரிவில் பயிலும் மாணவ மாணவியருக்கு கணித ஆசிரியையாக சிவகாமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த ஆசிரியை நேற்று கணித பாடத்துக்கான வகுப்பு தேர்வு நடத்தியுள்ளார். அதில் 28 மாணவ மாணவியர் குறைந்த மதிப்பெண் பெற்றதாகக் கூறி, அவர்களை பிரம்பால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். அதில் கை, கால்களில் வீக்கத்துடன் மாணவ மாணவியர் வகுப்பில் அழுதுகொண்டிருந்தனர். அடுத்த வகுப்புக்கு வந்த மற்றொரு ஆசிரியை, மாணவ மாணவியரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், தலைமையாசிரியர், முதல்வரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து முதல்வரின் அறிவுறுத்தலின்படி, பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரை கூகலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆசிரியர்கள் அழைத்துச்சென்றனர். தகலறிந்து மருத்துமனைக்கு வந்த பெற்றோர், பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லாவிடில் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை எனவும் தெரிவித்தனர்.
மேலும் கணித ஆசிரியை சிவகாமி, மாணவ மாணவிகளிடம் எப்போதும் விரோதப்போக்கை கடைப்பிடிப்பதாகவும் இது குறித்து நிர்வாகத்துக்கும் பள்ளிக் கல்வித் துறைக்கு புகார் அளித்திருந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.