கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கூடக்கரை, ஆண்டிப்பாளையம், எ.செட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், குருமந்தூர் ஊராட்சியில் 193 பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா ஆடுகளையும், உதவித்தொகைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ” பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து ஆய்வு செய்து முடிவு செய்யப்படும். அதற்கான அட்டவணையும் அதன்பின் வெளியிடப்படும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அரசு பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். அதற்காகவே பெற்றோர் விரும்பி அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதை ஊக்கப்படுத்த தான் 7.5% இட ஒதுக்கீட்டை அரசு கொண்டு வந்துள்ளது.
ஒவ்வொரு துறையிலும் உள்ள நிதி நிலைக்கேற்ப அரசு செயல்பட்டு வருகிறது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து எத்தனை பேரால் தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியும். ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து எத்தனை பேரால் நீட் பயிற்சி பெற முடியும்? நீட் தேர்வில் பயிற்சி பெற பல லட்சம் ரூபாய் செலவு செய்து பெற்றோரும் மாணவர்களுடன் தங்கி படிக்க வைக்கின்றனர். இதை பாராட்ட வேண்டுமே தவிர விமர்சனம் செய்யக்கூடாது “ என்றார்.
இதையும் படிங்க: மாசு இல்லாத போகி - மக்களுக்கு வேண்டுகோள்வைத்த அமைச்சர்