ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2017 - 18ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புப் படித்த 450 மாணவிகள் மடிக்கணினி கேட்டு பள்ளியில் மனு அளித்து வந்தனர். அம்மனுவில், ’தற்போது கல்லூரியில் படித்து வருவதாகவும், விடுமுறையில் பள்ளிக்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளதாக’ கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடப்பாண்டு மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி வரும் நிலையில், தங்களுக்கும் வழங்க வேண்டும் எனவும், முன்னாள் மாணவிகள் அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு 100க்கும் மேற்பட்ட மாணவிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த காவல்துறையினர், மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இங்கு நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மடிக்கணினி கிடைக்கும் வரை பள்ளியை விட்டுப் போக மாட்டோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம், முன்னாள் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க அரசாணை வெளியிட்டிருப்பதாகவும், அந்த அரசாணையின்படி மடிக்கணினி வழங்கப்பட்டு வருவதாக, தமிழ்நாடு அரசின் அரசாணையைக் காண்பித்தார். அதனைத் தொடர்ந்து மாணவிகள் தலைமையாசிரியரின் வேண்டுகோளை ஏற்றுக் கலைந்து சென்றனர்.