ஈரோடு மாநகராட்சியில் குப்பைகளை சேகரித்தல், கழிவுநீர் சாக்கடைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்டப் பொது சுகாதாரப் பணிகளுக்கு, நிரந்தரம், தினக்கூலி அடிப்படையில் சுமார் ஆயிரத்து 700 பேரை மாநகராட்சியே நேரடியாக ஊழியர்களை நியமனம் செய்து தூய்மை செய்து வருகிறது.
இதன் காரணமாக தூய்மைப் பராமரித்தலில் ஈரோடு மாநகராட்சி மாநில அளவில் முதல் இடத்திலும் தேசிய அளவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் இன்று (அக்.11) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மாநகராட்சியின் பொது சுகாதாரப் பணியை ஒப்பந்த முறையில் தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தொழிலாளர்கள், பொது சுகாதாரப் பணியை ஒப்பந்த முறையில் தனியாரிடம் கொடுக்கக் கூடாது என்று கூறினர்.
காவல் துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுடம் இடையே தள்ளுமுள்ளு
மேலும் தற்காலிகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும்; அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதனைக்கண்ட காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் காவல் துறையினருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதனால் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு கோரிக்கை மனு கொடுக்க வந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதையும் படிங்க: திருத்தணி முருகன் கோயில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்