ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் கடைகளின் ஆக்கிரமிப்பு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திடும் வகையில் சாலையோரங்களில் தேவையின்றி வாகனங்கள் நிறுத்தி வைத்திடக் கூடாது என்று மாநகராட்சி, போக்குவரத்துக் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.
இதனிடையே தொடர்ந்து ஆக்கிரமிப்புகளில் ஈடுபடும் கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இவ்வேளையில் சில நாள்களாக மாநகராட்சிக்குள்பட்ட பன்னீர்செல்வம் பூங்கா, கடைவீதி, திருவேங்கடம் சாலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் போக்குவரத்துக் காவல் துறையினருக்குப் புகார் தெரிவித்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் மாநகராட்சியினரும், போக்குவரத்துக் காவல் துறையினரும் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம் உதவியுடன் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடப் பகுதிகளை இடித்து அகற்றினர்.
மேலும், சாலையோரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள், கடைகளுக்குச் சொந்தமான பொருள்களைப் பறிமுதல்செய்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும்வகையில் கடை உரிமையாளர்கள் சிலர் போக்குவரத்துக் காவல் துறையினரிடமும், மாநகராட்சி அலுவலர்களிடமும் கடும் வாக்குவாதத்திலுல் ஈடுபட்டனர். ஆனால், சிலர் தாமாகவே முன்வந்து தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.