ஈரோடு அருகேயுள்ள வீரப்பன்சத்திரம் பச்சப்பாளி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் குடியிருப்புப் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக காலியாகவுள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தில், தனியார் அலைபேசி நிறுவனத்தின் மின்கோபுரம் அமைப்பதற்கான முயற்சி நடைபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் அலைபேசி மின்கோபுரம் அமையவுள்ள இடத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, குடியிருப்புப் பகுதியில் அலைபேசி மின்கோபுரம் அமைந்தால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களும், உடல்நலப் பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் வசித்து வரும் குடியிருப்புப் பகுதியில் மின்கோபுரம் அமைக்கக் கூடாது என்பன போன்ற முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
மேலும் குடியிருப்புப் பகுதியில் அலைபேசி மின்கோபுரம் அமையவுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு மனுக்கள் வழங்கியுள்ளதாகவும், மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அலைபேசி மின்கோபுரம் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தனர்.
மேலும் தங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு குடியிருப்புப் பகுதியில் அமையவுள்ள அலைபேசி மின்கோபுரத்திற்கு அனுமதியை ரத்து செய்திட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.
தங்களது கோரிக்கைகளை ஏற்று அலைபேசி மின்கோபுரம் அமைப்பதை ரத்து செய்யாவிட்டால், அடுத்தகட்டமாக தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும், மக்களின் நலன் கருதி அலைபேசி மின்கோபுரம் அமைவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.