ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி சோதனைச்சாவடியில் இருந்து திம்பம், ஆசனூர் வனத்தின் வழியாகச் செல்லும் சரக்கு வாகனங்களில் வனவிலங்குகள் அடிப்பட்டு இறப்பதால், கடந்த 2019ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் திம்பம் மலைப்பாதையில் இரவு நேரப் போக்குவரத்துக்குத் தடை விதித்தார்.
இதற்கிடையே உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் வாகனத்தில் அடிப்பட்டு உயிரிழக்கும் வன உயிரினங்களைக் காப்பாற்ற, மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பிப். 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
விவசாயிகள் கோரிக்கை
இது குறித்து ஈரோட்டில் நேற்று (பிப்.9) புதன்கிழமை மாவட்ட நிர்வாகம் மற்றும் விவசாயிகள் இடையே நடந்த சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை.
விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதையடுத்து விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.
போராட்டம்
தடையை நீக்கக்கோரித் தாளவாடி பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்கள், விவசாயிகள், வணிகர்கள் இன்று (பிப்.10) காலை 11.00 மணிக்கு பண்ணாரி சோதனைச்சாவடியில் போராட்டம் நடத்தினர். தடையைக் கண்டித்தும் போராட்டத்துக்கு ஆதரவாகவும் தாளவாடி, ஆசனூர், தலமலைப்பகுதியில் இருக்கும் காய்கறி மண்டி, தேநீர் கடைகள், விவசாய அங்காடிகள் என 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து விவசாயிகளும் வணிகர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கடையடைப்பு காரணமாகப் பேருந்தில் குறைந்தளவு மக்களே பயணித்தனர். கர்நாடக விவசாயிகளும் ஆதரவு தெரிவிப்பதால், மாநில எல்லையில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தலமலை சாலை, ஓசூர் சாலை, கடைவீதி சாலைகள் மக்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மருத்துவமனைகள் வழக்கம்போல செயல்பட்டன.
இதையும் படிங்க: காதல் ஜோடிகள் கவனத்திற்கு: வண்டலூர் பூங்காவில் இருந்து தாமதமாக வெளியே வரும் பார்வையாளர்களுக்கு அபராதம்