பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் தனபாலன், ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 41 நிறுவனங்களில் தொழில் முதலீடுகளை ஈட்டியுள்ளார். 38 ஆயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தந்துள்ளார். அதற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருவதாக கவலை தெரிவித்த அவர், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தடுக்கவல்ல பனையின் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பதநீர் இறக்கினாலே வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்புகின்றனர் என வேதனை தெரிவித்த தனபாலன், கள் மதுவிலக்கு பட்டியலிலிருந்து உணவுப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதன்மூலம் 20 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றார்.
தமிழ்நாடு அரசு, அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாக ரயில்வே துறை மீண்டும் தமிழ் மொழியில் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்த தனபாலன், மேலும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது சர்வதேச விமான நிலையத்திற்கு அண்ணா பெயரையும் உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராஜர் பெயரையும் வைக்கக் கருணாநிதி வேண்டுகோள்விடுத்ததை நினைவுகூர்ந்தார். அதன்பேரில் பெயர் சூட்டப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர், "ஆனால் தற்போது அண்ணா, காமராஜர் பெயரைப் பயன்படுத்துவதில்லை. படங்களும் அகற்றப்பட்டுள்ளன. விமான அறிவிப்புகளில் தலைவரின் பெயரில் விமான நிலையத்தின் பெயரை உச்சரிக்க வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்" என்றும் தெரிவித்தார்.