குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் மாணவர்கள் உட்பட பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் போராட்டங்களை நடத்திவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சத்தியமங்கலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் கண்டன பேரணியை நடத்தியது.
பெரிய பள்ளிவாசல் அருகே தொடங்கிய இப்பேரணியானது புதிய பாலம், மைசூர் ரோடு வழியாக பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது. பின்னர், அங்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தரம் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் கலந்துகொண்ட இந்த கண்டன ஆர்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்து இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தேனி
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்றும் ஜேஎன்யு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் உத்மபாளையம் இஸ்லாமிய ஜமாத்கள் சார்பாக மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ஒருவருடைய கரத்தை ஒருவர் பற்றிக்கொண்டு 1 கி.மீ தூரத்துக்கு அணிவகுத்து நின்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல், போடிநாயக்கனூரிலும் இஸ்லாமியர்கள் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர். போடி- மூணாறு சாலையில் 1 கி.மீ தூரத்துக்கு 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கரம் கோர்த்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு போடி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாமக்கல்
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, இந்திய முஸ்லிம் லீக் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, மனிதநேய மக்கள் கட்சி, ஜமா அத்துல் உலமா சபை உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தியது. 500க்கும் மேற்பட்டோர் பங்குபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம் - கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு இஸ்லாமியர்கள் பேரணி