ஈரோடு: தொடர்ந்து காவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவது வருத்தமளிப்பதாகக் கூறிய வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, அங்கு நின்றபடியே கண்கலங்கினார்.
ஈரோடு மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் ஆளினர்கள், காவலர்கள், ஊர்காவல் படையினர் 2300 பேருக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டுவசதிதுறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது, மாவட்டத்தில் 289 காவல்துறையினர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கண்கலங்கினார். இது காவல்துறையினரை நெகிழ்ச்சியடைய செய்தது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேசிய அமைச்சர், முன்கள பணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட தனி அறை அமைக்கப்பட்டுள்ளது என்றார். கூடுதலாக தடுப்பூசி கிடைத்த பின்னர் தடுப்பூசி செலுத்துவதில் உள்ள குறைபாடுகள் களையபடும் என்றும் கூறினார்.