ஈரோடு: திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பண்ணாரி முதல் காரப்பள்ளம் வரை சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சாலையில் வாகனப்போக்குவரத்து காரணமாக வனவிலங்குகள் அடிபட்டு உயிரிழப்பதால், இச்சாலையில் இரவு நேர வாகனப் போக்குவரத்தினை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டதால், லாரி உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர்.
இந்தப் பிரச்னை குறித்து, சத்தியமங்கலத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் திம்பம் மலைப்பாதை வழியாக கனரக வாகனங்களை அனுமதிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில், வரும் 11-ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
அன்று(ஏப்ரல்11) பண்ணாரி சோதனைச்சாவடியில் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவும், அன்றொரு நாள் முழுவதும் சத்தியமங்கலம் பகுதி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.