கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தையொட்டியுள்ள சவுதஹள்ளி பகுதியைச் சேந்தவர் சிவலிங்கப்பா. இவர் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள விவசாயத் தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரை புலித் தாக்க முயன்ற போது அவர் சத்தம் போட்டார். அதனால் அருகில் உள்ள வயல் வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் புலியை விரட்டி அவரைக் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால், அதற்குள் சிவலிங்கப்பாவை புலி கடித்துக் கொன்றது. பின்னர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல மணிநேரம் போராடி, சிவலிங்கப்பாவின் உடலைப் புலியிடமிருந்து மீட்டனர். அதேபகுதியில் கடந்த ஒரு மாதத்தில் இந்தப் புலி 15 மாடுகளையும், கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி இதே பகுதியைச் சேர்ந்த சிவமாதையா என்பவரையும் தாக்கிக் கொன்றது. தொடர்ந்து மனிதர்களையும் கால்நடைகளையும் வேட்டையாடும் ஆட்கொல்லி புலியால் உள்ளூர் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
மேலும், இந்தப் புலியைப் பிடிக்க வேண்டுமென போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, பந்திப்பூர் புலிகள் காப்பக வனஉயிர் அறிவியலாளர் ஒருவர் கூறுகையில், "இந்தப் பகுதியில் மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்குவது ஒரே புலிதான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் புலியின் உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வேட்டையாட முடியாமல் எளிய வழியாக மனிதர்களைத் தேர்வு செய்கிறது.
புலியின் புகைப்படம் ஏதும் கிடைக்காததால் இது ஆண் புலியா பெண் புலியா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்தப் புலி எட்டு முதல் ஒன்பது வயது வரை இருக்கக்கூடும் எனத் தெரியவந்துள்ளது" என்றார்.
இதனைத் தொடர்ந்து, கர்நாடக வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "இதே பகுதியில் தொடர்ந்து மனிதர்களும், கால்நடைகளும் தாக்கப்படுவதால் மக்கள் புலியை பிடிக்கக்கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 100க்கும் மேற்பட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் கூண்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவசரக் கூட்டமொன்றை நடத்திய கர்நாடக வனத்துறை இந்தப் புலியை 48 மணி நேரத்துக்குள் உயிருடன் பிடிக்க அல்லது சுட்டுக்கொல்ல உத்தரவிட்டது. புலியை சுட்டுக் கொல்ல சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் புலியை உயிருடன் பிடிக்க தீவிரத்தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
அதேபோல், புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க, ஆறு கால்நடை மருத்துவக் குழுவினரும் களம் இறங்கியுள்ளனர். மேலும், இருநூற்றுக்கும் அதிகமான வனத்துறை ஊழியர்கள் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அச்சுறுத்தும் புலி... மக்கள் கிலி...! - உயிருடன் பிடிக்கும் முனைப்பில் வனத் துறை!