பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில், நான்கு நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 95 அடியாக இருந்த அணை நீர்மட்டம், 100 அடியை எட்டியுள்ளது.
அணை நிரம்ப இன்னும் 5 அடியே உள்ள நிலையில், அணையில் 102 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்கமுடியும். இந்த விதிமுறை உள்ளதால் 102 அடியைத் தொட்டவுடன் பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளது.
எந்த நேரத்திலும் இது நிகழ வாய்ப்புள்ளதால், ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் பவானி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும்படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்கள் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானிசாகர் அருகேயுள்ள வெள்ளியம்பாளையம், புதூர் பகுதியில் பவானி ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. மேலும், பவானி ஆற்றில் குளிப்பதற்காகவோ, துணி துவைக்கவோ செல்லக்கூடாது எனவும், கால்நடைகளை ஆற்றங்கரையோரத்தில் மேய்ச்சலுக்கு விடவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.