ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே துறையம்பாளையத்தில் மூர்த்தி என்பவர், கரும்பு வெட்டும் கூலித்தொழில் செய்து வந்தார். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் மட்டுமில்லாது கர்நாடகா மாநிலம் வரை கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது இவரது வழக்கம். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கரும்பு வெட்டும் வேலைக்குச் சென்ற மூர்த்தி, வீடு திரும்பவில்லை. மூர்த்தியின் மகன்கள் கார்த்தி மற்றும் பிரபுகுமார் ஆகியோர் பல இடங்களில் தந்தை மூர்த்தியைத் தேடி வந்துள்ளனர்.
அடக்கம் செய்யப்பட்ட ஆண் சடலம்: எங்கும் அவர் கிடைக்காத நிலையில், கடந்த 31ஆம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையப்பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக கார்த்திக்கிற்கு வாட்ஸ்அப்பில் தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, சத்தியமங்கலம் சென்று பார்த்த கார்த்திக், முகம் அழுகிய நிலையில் இருந்தாலும் அவரது தந்தையைப் போன்ற தோற்றத்துடன் இருந்ததால், இறந்து கிடந்தது தனது தந்தை தான் என்று முடிவு செய்துள்ளார். உடனே சடலத்தை எடுத்துக்கொண்டு துறையம்பாளையம் கொண்டு சென்ற அவர் உரிய முறைப்படி சடங்குகள் செய்து அடக்கமும் செய்துள்ளார்.
மீண்டும் வந்ததால் அதிர்ச்சி: இந்நிலையில் இறந்துபோனதாகக் கூறி அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி, நேற்று (ஏப்.4) இரவு உயிருடன் வீடு திரும்பினார். அவரைப் பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அதன் பின்னர், இறந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் மூர்த்தியின் தோற்றத்தில் இருந்த வேறு ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்த தகவல் பரவியதால் கிராம மக்கள் மூர்த்தியை பார்த்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பங்களாப்புதூர் போலீசார் உடனடியாக மூர்த்தி வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: சாலை விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி உயிரிழந்த சோகம்