ஈரோட்டில் பிரபல நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி, அதன் லேபிள்களை ஒட்டி போலியாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு புகார் வந்தது. இந்தப் புகாரின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவு வகை பொருட்கள், சிகரெட் பாக்கெட்டுகள், போலி மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பிரபல நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஈரோட்டில் பிரபல பீடி நிறுவனமான 10ஆம் நம்பர் பெயரில் போலி பீடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கருங்கல்பாளையம் காவல் துறையினருக்குப் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், கருங்கல்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோசிகீரனார் ஒன்றாவது வீதிப் பகுதியிலுள்ள வீடொன்றில் பீடிக் கட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து இன்று (ஆகஸ்ட் 12) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஜமால் என்கிற அதிமுக பிரமுகரின் வீட்டில், சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 10ஆம் நம்பர் போலி பீடிக் கட்டுகள் மறைத்து வைத்திருப்பதை கண்டறிந்த காவலர்கள், அவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்த மோசடியில் ஈடுபட்ட ஜமாலைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்த காவல் துறையினர், இந்த போலி பீடி விற்பனையில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.