ஈரோடு: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.
இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தேங்காய் மட்டை பாரம் ஏற்றிய லாரி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி செல்வதற்காக திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.
லாரி 18 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது, அதிக பாரம், உயரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
லாரி சாலையோரம் கவிழ்ந்ததால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இவ்விபத்து குறித்து ஆசனூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக பாரம், உயரம் காரணமாக லாரி கவிழ்ந்ததாக, விசாரணையில் காவல் துறையினர் தெரிவித்தனர்.