ஈரோடு மாவட்டத்தில் தற்போது கரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மேலும், அரசின் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சியின் சார்பில் அனைத்து வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபார நிறுவனங்கள் முதல் பெரிய வியாபார நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், "ஈரோடு மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள அனைத்து வகை வியாபார நிறுவனங்களிலும் அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த விளம்பரப் பதாகைகள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அமைத்திட வேண்டும்.
முகக்கவசம் அணிந்து வருபவர்களை மட்டுமே கடைக்குள் அனுமதிக்க வேண்டும். மேலும், கடைக்குள் நுழைபவர்கள் அனைவரின் கைகளையும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கடைகளில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கடையில் இருப்பவர்கள் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தங்களது கைகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கடைகளில் குளிர்சாதன வசதியை எக்காரணம் கொண்டு பயன்படுத்திடக் கூடாது.
அரசின் விதிமுறைகளை அனைத்துத் தரப்பு வியாபாரிகளும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு அரசின் விதிமுறைகள் பின்பற்றாத நிறுவனங்கள் கண்டறியப்பட்டால், நிறுவனங்களுக்கு உடனடியாகச் சீல் வைக்கப்படும்" என்று அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: சென்னையில் கரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ. 400 கோடி செலவு - மாநகராட்சி ஆணையர் தகவல்