ஈரோடு: சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை உள்ளது.
இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாடு-கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவைக்கு திம்பம் மலைப்பாதை வழியாக இன்று (25) சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது 19ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆசனூர் காவல்துறையினர், ஓட்டுநரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, மற்றொரு பகுதியில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு புறப்பட்ட சரக்கு வேன், கும்டாபுரம் வனச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வேன் சாலையோரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், ஓட்டுநர் சத்தியமங்கலத்தை சேர்ந்த தர்மராஜூக்கு சிறு காயம் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Exclusive:'ஆடைக்காக விமர்சித்தவர்கள்; இப்போது பாராட்டுகிறார்கள்' - தங்கம் வென்ற வீராங்கனை நிகத் ஜரீனின் தந்தை உருக்கம்!