ஈரோடு: சத்தியமங்கலத்தில் ரீது தொண்டு நிறுவனம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிதியுதவி, தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு தலைமை வகித்த வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, தூய்மைப் பணியாளர்களுக்கு நிதியுதவிகளை வழங்கினார். அப்போது, தூய்மைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பணி நிரந்தரம், சம்பள உயர்வு கேட்டு மனு அளிக்கப்பட்டது.
தொலை நோக்குத் திட்டம்
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சு.முத்துச்சாமி, ”முதலமைச்சரின் அணுகுமுறை நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தின் படியாக உள்ளது. மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை துறைவாரியாகக் கேட்டு பெற்று, தீர்வும் அளிக்கிறார். திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தற்போது அலுவலர்கள் நிறைவேற்றும்போது, திமுக வாக்குறுதி என்றால் அலுவலர்களுக்கு நெருடல் ஏற்படும் என்பதற்காக, முதலமைச்சர் "தொலை நோக்குத் திட்டம்" என்று பெயரை மாற்றி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.
கண்ணியத்துடன் பேச முதலமைச்சர் அறிவுறுத்தல்
சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவாலயத்தில் நடந்த எம்எல்ஏ, எம்பிக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பேசும்போது, எதிர்க்கட்சிகள் கூடுதலாக வார்த்தையைப் பயன்படுத்தினால் கூட பதிலுக்காக நாம் புண்படும்படி பேசக்கூடாது என்றும், கண்ணியமாக நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் கடுமையான வார்த்தையை பயன்படுத்திய போது, அதற்கு பதிலளித்த அமைச்சரும் கோபமாகப் பேசினார். அப்போது முதலமைச்சர் குறுக்கிட்டு, அமைச்சர் கோபமாகப் பேசிய வார்த்தையை வாபஸ் பெறுகிறேன் என்று சட்டப்பேரவையில் தெரிவித்தது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது” என்றார்.
இதையும் படிங்க: மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்லும் போது இந்திய கடற்படை என்ன செய்கிறது? - சீமான்