ஈரோடு: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் 215ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அடுத்த ஓடாநிலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி. ராமலிங்கம், சிவசுப்பிரமணி, தென்னரசு, என்.டி. வெங்கடாசலம், ஈம்.ஆர்.ராஜா, மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கரோனாவை வென்ற 110 வயது மூதாட்டி!
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாடு அரசு கரோனா நேரத்திலும் தியாகிகள் அனைவருக்கும் விழாக்கள் எடுக்க வேண்டும் என நினைத்து 5 நபர்கள் மூலம் மரியாதை செலுத்த அனுமதி வழங்கி இவ்விழாவை நடத்தியிருக்கிறது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பொறுப்பில் இருக்கும்போது விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாதான் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவித்தார். அவர் வழியில் ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் தியாகிகளை பெருமைப்படுத்துவதில் மிகவும் சிறந்து விளங்குகிறார் என்றார்.
பெண்கள் கழிவறையைச் சுத்தம் செய்த அமைச்சர்!
தொடர்ந்து பேசிய அவர், இந்தப் பகுதியில் தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தமிழ்நாடு முழுவதிலும் மணி மண்டபங்கள், சிலைகளை முதலமைச்சர் அமைத்துவருகிறார். சுதந்திர போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் பெருமைப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறது இந்த அரசு என்றார்.