தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தமிழ்நாடு மக்களுக்கு நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதன்படி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த மே 10ஆம் தேதி முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டது. இரண்டாம் தவணையாக ரூ. 2000 மற்றும் 14 வகை மளிகை பொருள்கள் அடங்கிய பை இன்று சத்தியமங்கலம் ரேஷன் கடையில் வழங்கப்பட்டது.
கடந்த இரு தினங்களாக வீதி வீதியாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் தினமும் 50 பேர் பெறுவதற்கான டோக்கன் வழங்கினர். அதனைத் தொடர்ந்து இன்று (ஜூன் 15) நிவாரணம் வழங்குவதால் ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் பாட்டில்கள், வயர், பை மற்றும் கூடை வைத்து இடம்பிடித்து காத்திருந்தனர்.
ரேஷன் கடைகளில் இன்று வழங்குவதாக குறிப்பிட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூபாய் இரண்டாயிரம் மற்றும் மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது.
தகுந்த இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே பொருள்கள் வழங்கப்படும் என்பதால் விதிகளை பின்பற்றி மக்கள் காத்திருந்தனர். ஈரோடு மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கு தினமும் 50 பேருக்கு மட்டுமே தினந்தோறும் வழங்கப்படுவதால் கூட்ட நெரிசலை தவிர்க்க இம்மாதம் இறுதி வரை வழங்கப்படும் என ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.