ஈரோடு மாவட்டத்தில் கூடுதல் எஸ்.பி.யாக பணியாற்றி வரும் கனகேஸ்வரி சிறந்த புலனாய்வுக்கான மத்திய அரசின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதுக்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுவது 2019ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலையும், அதனை திறம்பட விசாரித்து குற்றவாளிகளுக்கு கனகேஸ்வரி மரண தண்டனை பெற்றுக் கொடுத்ததும் தான்.
அப்போது கனகேஸ்வரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். காவேரிப்பாக்கம் சுப்புராயன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஏ.சி. வெடித்து தாய், தந்தை, மகன் என்று 3 பேர் உயிரிழந்ததாக காவல் துறைக்கு தகவல் பறந்தது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற கனகேஸ்வரிக்கு சம்பவ இடத்தில் இருந்த தடயங்கள் உறுத்தலாகவே இருந்தன.
முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில், முதிய தம்பதியான ராஜா, கலைச்செல்வி மற்றும் அவர்களின் மகன் கௌதம் என்று 3 பேர் உயிரிழந்த நிலையில் அதே வீட்டில் வசித்து வந்த மூத்த மகனான கோவர்த்தனின் செயல்பாடுகள் சந்தேகத்தை கிளப்பின.
குடி பழக்கத்திற்கு அடிமையான கோவர்த்தனுக்கு எளிமையாக திருமணம் நடைபெற்ற நிலையில், பொறுப்பாக வீட்டை கவனித்து வந்த கௌதமுக்கு தடல் புடலாக திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. இது கௌதம் மற்றும் அவரது மனைவி தீபிகாவை எரிச்சலடையச் செய்துள்ளது. குடும்பத்தின் முழு சொத்தையும் அபகரிப்பதற்காக தன் மனைவி தீபா காயத்ரியுடன் கூட்டு சதி செய்து தாய், தந்தை, தம்பி என மூவரையும் ஈவிரக்கமின்றி பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்துள்ளார் கோவர்த்தன். இதனிடையே தீக்காயத்துடன் தப்பி ஓடி வந்த தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர் கோவர்த்தனனும் , தீபிகாவும் ஏசி வெடித்துவிட்டதாக கூறி நாடகமாடியுள்ளனர். விசாரணையின் போது கோவர்ததனன் குற்ற உணர்ச்சி ஏதுமின்றி நடந்து கொண்டதாக விவரிக்கும் காவல் அதிகாரி கனகேஸ்வரி, சாட்சிகள் ஒவ்வொருவராக விசாரித்து குற்றவாளியை கண்டு பிடித்தது சவாலானதாக அமைந்தது என கூறுகிறார்.
பிரேதப் பரிசோதனையில் ராஜவின் உடலில் வெட்டுக்காயம் இருந்தது சந்தேகத்தை உறுதி செய்யவே கனகேஸ்வரி தலைமையிலான குழு விசாரணையை துரிதப்படுத்தியது. பல கட்ட வழக்கு விசாரணையின் போது பலர் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். இருப்பினும் இறுதிவரை போராடி பொருத்தமான சூழ்நிலை சாட்சிகளை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி வழக்கை முடித்துள்ளார் கனகேஸ்வரி.
இவ்வழக்கை விசாரித்த வெடிகுண்டு வழக்குகளுக்கான சிறப்பு பூந்தமல்லி நீதிமன்றம் கோவர்த்தனன் மற்றும் தீபிகா இருவரும் குற்றவாளிகள் என உறுதி செய்தது மேலும் இருவருக்கும் 4 மரண தண்டனை , 2 ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கின் காரணமாக மத்திய அரசின் புலனாய்வு விசாரணையில் சிறப்பாக பணியாற்றியமைக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கூடுதல் எஸ்.பி. கனகேஸ்வரி.
இதையும் படிங்க: நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீச்சு