ஈரோடு: மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என்ற போதிலும் அக்டோபர் மாத இறுதிவரை 102 அடி வரை நீர்த் தேக்க வேண்டும் என விதிமுறை உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் நவம்பர் 1 முதல் அணையின் நீர்மட்டம் 105 அடி வரை நீர் தேக்கிப் பராமரிக்கலாம் என்பதால் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயரத் தொடங்கிய நிலையில் மீண்டும் தற்போது பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையில் நீர்மட்டம் அதிகரிப்பு
கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் பாசனத்திற்குத் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பவானி ஆற்றுப் பாசனப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் பாசனத்திற்குத் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீர்த் தேவைக்காக 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
நீர் வரத்து அதிகரிப்பால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 103.80 அடியை எட்டியது. அணையில் நீர் இருப்பு 31.79 டிஎம்சி ஆகவும், நீர்வரத்து 2413 கன அடியாகவும் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103 அடியை எட்டிய நிலையில் மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அணையின் நீர்மட்டம் 103 அடியை எட்டியுள்ளதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: நஞ்சாகும் யமுனா நதி - தலைநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!