ஈரோடு: பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், பவானி ஆற்றில் அதிக அளவு உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொடிவேரி அணையை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு பெய்த மழையால், பவானிசாகர் அணையிலிருந்து சுமார் 600 கன அடி நீர், கொடிவேரி அணை வழியாக செல்கிறது. இதனால், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கொடிவேரி அணைக்கு வர இன்று (ஆக.1) சுற்றுலா பயணிகளுக்கு பொதுப்பணித்துறைத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், ஆடி 18 அன்று கொடிவேரி அணைக்கு முன்னோர்களுக்கு திதி கொடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அணைக்கு வருவது வழக்கம். பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், எப்போது வேண்டுமானாலும் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளது. ஆடி 18 அன்று மட்டும் பவானி ஆற்றின் நீர்வரத்தைப் பொறுத்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீன்பிடி தடைக்காலம் நிறைவு - மானிய டீசல் வழங்க மீனவர்கள் கோரிக்கை!