அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்குதிரையில் அந்தியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர், அதிமுக வேட்பாளர் சண்முகவேலை அறிமுகம் செய்து வைத்து பேசினர்.
அப்போது பேசிய செங்கோட்டையன், ”அதிமுக தேர்தல் அறிக்கை எப்படியோ கசிந்து விட்டது. அதனால் தான் திமுக நமக்கு முன்பே குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக் கூறியுள்ளது. அதையும் தாண்டி நமது முதலமைச்சர் ரூ.1,500 மற்றும் 6 சிலிண்டர்கள் இலவசம் என அறிவித்துள்ளார். மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்” என்றார்.
அதனைத்தொடர்ந்து பேசிய கருப்பணன், “குடிமராமத்து திட்டத்தால் ஏராளமான ஏரி,குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. கூட்டுக்குடிநீர் திட்டம் அனைத்து ஊராட்சிகளுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, நாம் பொய் சொல்லி ஏமாற்றி ஓட்டு வாங்க வேண்டிய அவசியமில்லை. முதலமைச்சர் சிறப்பாக செயல்படுவதாக திமுக நிர்வாகிகளே தெரிவிக்கின்றனர். எனவே, இந்த தேர்தலோடு திமுக காணாமல் போகும்” எனக் கூறினார்.
இதில் அத்தொகுதியைச் சார்ந்த ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நம்ப முடியாத வாக்குறுதி! - அதிமுக மீது வழக்கறிஞர்கள் புகார்!