ஈரோடு: கோபிசெட்டிபாளையத்திலுள்ள அத்தாணி பகுதியைச் சேர்ந்தவர் மயில்வாணன், தெய்வப்பிரியா தம்பதிகளுக்கு, ஹரினீஷ் என்ற 8 வயது மகனும் ரூபன் என்ற 5 வயதுடைய மகனும் உள்ளனர்.
இந்நிலையில் மயில்வாணன், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கோபி பேருந்துநிலையம் அருகே உள்ள ஒரு கடைக்கு ஜவுளி எடுப்பதற்காகச் சென்றனர்.
அப்போது சாலையின் ஒரு புறத்தில் மயில்வாணன் நின்று கொண்டு, தனது மனைவி தெய்வப்பிரியா மற்றும் இரண்டு குழந்தைகளை ஜவுளிக்கடைக்குச் செல்லுமாறு அனுப்பியுள்ளார். அப்போது தெய்வப்பிரியா தனது குழந்தைகளுடன் சாலையைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக, பின்னால் வந்த இருசக்கர வாகனம் ஹரினீஷ் மீது வேகமாக மோதியது.
தூக்கி வீசப்பட்ட குழந்தை
இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் குழந்தை ஹரினீஷ் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயங்களுடன் சாலையில் உருண்டு விழுந்தார்.
தலையில் பலத்த காயத்துடன் மயங்கி விழுந்த சிறுவன் ஹரினீஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் விசாரணை
அக்கம்பக்கம் இருந்தவர்கள் குழந்தைகளை விபத்தில் சிக்கியதைப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, விபத்தை ஏற்படுத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து கோபி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற நபரை, சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் மருத்துவக் கல்லூரியில் 50 விழுக்காடு இடங்களுக்கு அரசு கட்டணம் - தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி