ஈரோடு: அந்தியூர் தவிட்டு பாளையத்தைச் சேர்ந்த 58 வயது முதியவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது குழந்தையின் தாயார் ஒருவர், தனது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளித்தார்.
இந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு பவானி மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பவானி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பொன்னம்மாள் தலைமையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி அளித்துள்ள தீர்ப்பில், குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, பாலியல் தொல்லையினால் பாதிக்கப்பட்டோருக்கான நிதி உதவி உடனடியாக வழங்கவும் தீர்ப்பு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: உக்ரைன் போர் - மகளை மீட்கக்கோரி பெற்றோர் அரசுக்கு கோரிக்கை