தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவலைத் தடுப்பதற்கு அத்தியாவசியக் கடைகள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டன.
மக்கள் அதிகம் கூடும் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் கள்ளச்சாராயத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். இதையடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை பிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் அரியப்பம்பாளையம் தோட்டத்துக்கு சாலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகக் கிடைத்த தகவலையடுத்து சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா தலைமையில் காவல் துறையினர் அங்குள்ள தோட்டத்து பண்ணை வீட்டை சுற்றி வளைத்தனர்.
அங்கு சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் அங்கு கேஸ் சிலிண்டர் வைத்து வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. இது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த சேகர் (49), சுப்பிரமணி (38), விஸ்வநாதன் (23), சண்முகம் (39) ஆகியோரை கைதுசெய்தனர்.
அவர்களிடமிருந்து சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய கேஸ் சிலிண்டர், அடுப்பு, பானை, அலுமினிய பாத்திரம், 200 லிட்டர் சாராயா ஊறலை பறிமுதல்செய்தனர். மேலும் அவற்றை அங்கேயே கீழே ஊற்றி அழித்தனர்.