தங்களுக்கு நன்மையில்லை என்று தெரிந்ததும், மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில், 108 நாட்களையும் கடந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு தீர்வு இன்றே வருமா என்பது தெரியாது. ஆனால் வரலாறாய் மாறிப்போன அப்போராட்டம் அதனை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட விவசாயிகள் தங்களது தேவைகளோடு சேர்த்து வேறு எதற்காகவும் போராடி, அதில் மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறார்களா?
அதற்கு நாம் போக வேண்டியது 1996 ஆம் ஆண்டிற்கு. எங்கே என்கிறீர்களா? நம் தமிழகத்தின் மொடக்குறிச்சி தொகுதிக்குத்தான். இந்திய தேர்தல் வரலாற்றில் எத்தனையோவற்றை பார்த்திருப்போம், ஆனால், மொடக்குறிச்சியில் நடந்தது தேர்தல் ஆணையமே திக்குமுக்காடிப் போன ஒன்று. அதனால் விளைந்தது ஒரு சீர்திருத்தம். அதற்கு உரித்தானவர்கள் 1,016 விவசாயிகள்.
கொங்கு மண்டலத்தின் ஈரோடு மாவட்டத்தில் பெரும்பான்மையினர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். அதனால், தங்களது தொழில் செழிக்க அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், கேளாக்காதாகிப்போயின கட்சிகள். எனவே அவர்களின் கவனத்தை தம்பக்கம் திருப்ப ஒரு முடிவிற்கு வந்தனர் விவசாயிகள். அதற்கு அவர்கள் பயன்படுத்தியது 1996 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை. இத்தேர்தலில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் மொத்தம் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 1,033. அவர்களில் விவசாயிகள் மட்டும் 1,016 பேர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும், தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, 1,016 விவசாயிகள் வேட்பாளர்களாக களமிறங்கினர். இதற்காக அத்தேர்தலின் போது 120 பக்கங்களுக்கு வாக்குச்சீட்டு புத்தகமே அடிக்கப்பட்டது. ஆனால், இத்தனை பேருக்கு சின்னத்திற்கு எங்கே போவது?
விழி பிதுங்கி நின்றார் அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன். விளைவு, மே 2 ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மொடக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒரு மாதம் தள்ளிப்போனது. ஒருவழியாக ஜூன் 1 ல் தேர்தல் நடைபெற்று முடிந்து, அதன் முடிவுகளிலும் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்தன. 1,033 வேட்பாளர்களில் திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசன் 64 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற, 1,030 பேர் டெபாசிட் இழந்தனர்.
மேலும் மொத்த போட்டியாளர்களில், ராமசாமி என்ற பெயரில் 30 பேரும், பழனிசாமி பெயரில் 60 பேரும், 28 கந்தசாமிகள், 27 சுப்பிரமணியன்கள், 26 சின்னச்சாமிகள், 14 முத்துச்சாமிகள் இருந்தனர். இதில், 88 வேட்பாளர்கள் ஒரு ஓட்டைக் கூட வாங்கவில்லை. 158 பேர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கினர். இதன் பிறகு சுதாரித்துக்கொண்ட தேர்தல் ஆணையம் வேட்பாளர் வைப்புத்தொகையை உயர்த்தியது எல்லாம் தனிக்கதை. இதனால் விளைந்ததே இன்றைய தேர்தல் சீர்திருத்தம்.
இந்த வரலாற்று நிகழ்வு குறித்து நம்மிடம் பேசிய, தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பின் செயலாளர் ’கள்’ நல்லசாமி, ”விவசாயப் பிரச்சனை, அதிக சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுவதை கட்டுப்படுத்துதல், அதற்காக வைப்புத்தொகையை அதிகப்படுத்துதல், 10 பேர் முன்மொழிதல் உள்ளிட்டவற்றை கோரி விவசாயிகள் தேர்தலில் போட்டியிட்டனர். இன்றைக்கு அவற்றை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதனால் அதற்குப் பிந்தைய தேர்தல்களில் ஆணையத்திற்கு 350 கோடி ரூபாய் செலவு குறைக்கப்பட்டது.
தமிழக தேர்தல் வரலாற்றில் இன்றைக்கும் அது ஒரு சாதனையாகவும், அன்றைய தலைமை தேர்தல் ஆணையர் சேஷனே நேரில் வந்து பாராட்டும் அளவுக்கு இந்த முன்னெடுப்பு அமைந்தது. ஆனாலும் அக்கோரிக்கைகளில் சில இன்னும் முழுமை பெறவில்லை” என்றார்.
நாடு செழிக்க, கழனி செழிக்க வேண்டும் என்பார்கள். அக்கழனி செழிக்க வேண்டி போராடிய விவசாயிகளின் போராட்ட வெளிச்சத்தால்தான், தேர்தல்களில் இன்று சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும், விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் மட்டும் இன்னும் அப்படியே இருக்கின்றன.
இதையும் படிங்க: திருக்குறளை தேசிய நூலாக்க நடவடிக்கை, நீட் தேர்வு ரத்து - திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்