ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் கீழ்பவானி பிரதான கால்வாய் மூலம் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை நடைபெற்று வரும் நிலையில் கடந்த நான்கு நாட்களாக கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால் தடப்பள்ளி பாசன வாய்க்கால் பகுதியில் பொன்னாச்சிப்புதூர் வெங்கமேடு தாழைக்கொம்புப்புதூர் பெருந்தலையூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள 100 க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
இந்தாண்டு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதிலிருந்து மழைப்பொழிவு அதிகரித்து காணப்பட்டதால், தொடர் மழையினால் நெற்கதிர் அறுவடை செய்யமுடியாமல் தவித்து வருவதாகவும் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நெல் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகவும் ஆனால் விளைச்சல் குறைந்துள்ளதாலும் மழை சேதத்தினாலும் ரூ.10 ஆயிரம் கூட வருவாய் ஈட்டமுடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும் அதேபோல் கால்நடைக்கு தேவையான தீவன வைக்கோல்களும் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தொடர் மழையினால் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், தனிநபர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அறுவடை செய்யப்பட்டு தற்காலிக அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் வைத்திருந்த நெல்களும் மழையில் நனைந்து சேதடைந்துள்ளதாகவும் அதற்கும் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை அதிகரித்து நெல்கொள்முதல் செய்யவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக சார்பில் பென்னகாரம் தொகுதியில்வீரப்பன் மகள் போட்டி?