கோயம்புத்தூர்: பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று முன் தினம் (டிச.01) நடைபெற்றது. பொள்ளாச்சி துணை ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதியோர் மற்றும் விதவை உதவித் தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, முதலமைச்சரின் விபத்து நிவாரணத் தொகை, உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 343 பயனாளிகளுக்கு 78 லட்சத்து 83 ஆயிரத்து 823 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியதாவது, “கோவை மாவட்டத்தில் சமீபத்தில் பல்வேறு இடங்களிலும் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. முதலமைச்சரின் உத்தரவுப்படி மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது ஆய்வு நடத்தி அதற்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது பொள்ளாச்சியில் 343 பயனாளிகளுக்கு 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீடுகள் வேண்டுமென மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதோடு அந்த இடத்தில் மலைவாழ் மக்களுக்கு இலவசமாக வீடுகளும் கட்டிக் கொடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் ZyCoV-D தடுப்பூசி அறிமுகம்