கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சியில் பொதுமக்களிடம் அரசாங்க சேவைகளுக்கு லஞ்சமாக பணம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் கருமத்தம்பட்டி பேரூராட்சியில் திடீரென ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது உள்ளே இருந்த அலுவலர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், வெளியிலிருந்து யாரையும் உள்ளே அனுமதிக்காத வகையில் கதவை அடைத்து வைத்திருந்தனர். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முழுவதுமாக சோதனையிட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்து ஐந்தரை லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதில் மூன்றரை லட்ச ரூபாய் பணத்திற்கு கணக்கு காட்டப்பட்டது. கணக்கில் வராத பணமாக 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணக்கில் காட்டப்படாத இந்த பணம் யாருடையது எதற்காக இங்கு கொண்டுவரப்பட்டது வேறு ஏதேனும் பணி செய்வதற்காக லஞ்சமாக கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது.