கோயம்புத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள கோவையின் வனப்பகுதிகளில் ஏராளமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, மான், கரடி, காட்டுப்பன்றி, பாம்புகள் என ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மலைத்தொடர்களில் உருவாகும் சிற்றோடைகள் ஒன்றாகி இந்த நீர்வீழ்ச்சிகள் உருவாகின்றன.
கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, வைதேகி நீர்வீழ்ச்சி, தாளியூர் நீர்வீழ்ச்சி, அட்டிக்காடு நீர்வீழ்ச்சி என ஏராளமான நீர்வீழ்ச்சிகள் இப்பகுதிகளில் உள்ளன. இதில் கோவை குற்றாலம், வைதேகி நீர்வீழ்ச்சிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரத்து இருக்கும். அவ்வப்போது வறண்டாலும் கூட தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிக்க பலரும் ஆர்வம் காட்டுவதுண்டு.
இதில் கோவை நரசிபுரம் அடுத்த வெள்ளிமலைபட்டிணம் பகுதியிலுள்ள வைதேகி நீர்வீழ்ச்சி என்பது சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை தொள்ளாயிரம் மூர்த்திகள் கண்டி நீர்வீழ்ச்சி என அழைக்கப்பட்டது. நடிகர் விஜயகாந்த் நடிப்பில் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வந்த "வைதேகி காத்திருந்தாள்" திரைப்படம் நீர் வீழ்ச்சி பகுதியில் எடுக்கப்பட்டதை அடுத்து, இந்த நீர்வீழ்ச்சி வைதேகி நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுகிறது.

இந்த அருவியை சுற்றி காவிளியம்மன் கோயில், பொம்மனத்தம்மன், கொம்புதூக்கி அம்மன், ராயர் கோயில், அனையாத்தாள் உள்ளிட்ட சிறு கோயில்கள் ஏராளமாக உள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் விசேச நாட்களில் குடும்பத்தினருடன் சென்று இக்கோயில்களுக்கு திருவிழா எடுத்து பொங்கல், ஆடிப்பட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திவந்தனர்.

ஆனால் திரைப்படம் வெளியான பிறகு இப்பகுதிக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், அருவியில் தண்ணீர் அருந்தவரும் யானைக்கூட்டம் தாக்கி மரணங்கள் அதிகரித்தது. மேலும் பலர் மது போதையில் வனப்பகுதிக்குள் வந்து பாட்டில்களை உடைத்து போடுவதால் விலங்குகள் காயம் ஏற்படுவதும் அதிகரித்தது.

இதையடுத்து இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல போளுவாம்பட்டி வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டதோடு கடுமையான கண்காணிப்பும் மேற்கொண்டுவருகிறது. அத்துமீறி நுழைபவர்கள் மீது அபராதம், வழக்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை.
‘நம் உரிமைகளை நிலைநாட்டிட நமக்கான ஆயுதம்’ - எழுத்தின் மேன்மையும், அவசியமும்!
மக்கள் நடமாட்டம் குறைந்ததை அடுத்து இப்பகுதியில் இயற்கை தன்னை மீண்டும் புதுப்பித்துக்கொண்டுள்ளது. இதனால் இப்பகுதி முழுவதும் ஏராளமான மரங்கள் வளர்ந்து தற்போது பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு, மீண்டுள்ள இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்டுதோறும் நீர் விழும்போது யானைகள் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் மற்றும் இரை தேடி வனத்தை விட்டு வெளியே வராது என்பதால் இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அருவி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இயற்கையை சீண்டாமல் அதன் போக்கில் விட்டாலே மீண்டும் அது தன்னை உயிர்பித்துக்கொள்ளும் என்பதற்கு தொள்ளாயிரம் மூர்த்திகள் கண்டி நீர்வீழ்ச்சியே சாட்சியாக உள்ளது.