நீலகிரி: பூங்காக்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழைக் கட்டாயம் காண்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று, ஒமைக்ரான் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுப்படுத்துவதற்கு, தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்திவருகிறது.
அதன்படி, சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் சுற்றுலாத் தலங்களில் இன்று (ஜனவரி 4) முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
குறிப்பாக, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லும் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்பட முக்கியச் சுற்றுலாத் தலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
18 வயதுள்ளவர்களுக்குச் சான்றிதழ் கட்டாயம்
பூங்காவைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயமாக இரண்டு தவணை கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், அதற்கான சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என்ற நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பூங்காக்களின் நுழைவாயிலிலிருக்கும் ஊழியர்கள் 18 வயதுக்கு மேல் வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியின் சான்றிதழ்களைச் சரிபார்த்த பின்னர், அனுமதித்துவருகின்றனர்.
அத்துடன் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்; போதிய தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பூங்கா நிர்வாகம் கண்காணித்துவருகிறது. அரசின் இந்த விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தோ-பசுபிக்: ஜெய்சங்கர், பிளிங்டன் தொலைபேசி உரையாடல்