வாசல்:
கடந்த 2011ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர், கோயம்புத்தூரில் 2 மக்களவைத் தொகுதிகளும், 10 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன. மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி ஆகியவை பொதுத் தொகுதிகள், வால்பாறை தனி தொகுதி.
தொகுதிகள் உலா:
கோவை வடக்கு: தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட தொகுதி இது. சிறு குறு நிறுவனங்கள் அதிகளவில் இங்கு இயங்கி வருகின்றன. தடாகத்தில் தொடங்கி ஒண்டிப்புதூர் வரை செல்லும் சங்கனூர் ஓடையை தூர்வாரி கரைகளைப் பலப்படுத்த வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
அப்படி செய்வதால் நிலத்தடி நீர் அதிகரித்து, கரையோர மக்கள் பயமில்லாமல் பாதுகாப்பாக இருப்பார்கள். மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள புதிய பேருந்து நிலையத்தைச் சீரமைக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.
கோவை தெற்கு: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர, மாவட்ட காவல்துறை அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், அரசு தலைமை அலுவலகங்கள், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை இந்த தொகுதிக்குள் இருக்கின்றன.
இஸ்லாமியர்களும், வட மாநிலத்தவர்களும் இங்கு அதிகம் வசிக்கிறார்கள். அரசு மருத்துவமனை சுகாதாரமற்ற முறையில் இருப்பதும், மேம்படுத்தப்படாமல் இருப்பது பெரும் பிரச்னையாகவுள்ளது.
சூலூர்: விவசாயத்தையும், விசைத்தறித் தொழிலையும் பிரதானமாகக் கொண்டது சூலூர் தொகுதி. இத்தொகுதியின் பல ஆண்டு கால கோரிக்கை, தொகுதிக்குள் ஜவுளி பூங்கா ஒன்று அமைப்பது. அதற்காக, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் விசைத்தறி தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொகுதிக்குட்பட்ட சுல்தான் பேட்டை, வதம்பச்சேரி பகுதிகளில் விவசாயத்திற்கான தண்ணீர் தடுப்பாடு நிலவுகிறது. தென்னை நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதும் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.
மேட்டுப்பாளையம்: மேற்குதொடர்ச்சி மலை, நீலகிரி மலையடிவாரம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் இணையும் பகுதி, பவானி சாகர் அணை நீர் பிடிப்பு பகுதி என, பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தொகுதி மேட்டுப்பாளையம். பிரதான தொழில் விவசாயம்; அடுத்தபடியாக இருப்பது சிறுமுகை நெசவுத் தொழில்.
இங்கிருந்து தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா பகுதிகளுக்கு கறிவேப்பிலை அதிகமாக அனுப்பப்படுகிறது. இதனை மையமாக கொண்ட தொழிற்சாலை கொண்டு வரவேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.
இங்குள்ள பழங்குடி மக்கள் குடியிருப்புகள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலேயே இருக்கிறது. விளை பொருட்களைச் சேமித்து வைக்க குளிர்பதனக் கிடங்கும், நெசவு தொழிலுக்கான தொழிற்பூங்கா அமைக்காததும் தீர்க்கப்படாத குறைகளாகும்.
கவுண்டம்பாளையம்: மாவட்டத்தின் மிகப்பெரிய தொகுதி கவுண்டம்பாளையம். முக்கியத் தொழிலாக விவசாயம் இருந்தாலும், செங்கல் உற்பத்தி, குறு, சிறு நிறுவனங்களும் அதிகம். மலை கிராமங்கள் அதிகமுள்ள இத்தொகுதியில், மலைவாழ் மக்களுக்கு நடமாடும் ரேஷன் கடை அமைத்து தரப்படும் என்ற வாக்குறுதி, இன்றும் வாக்குறுதியாகவே தொடர்கிறது.
கவுண்டம்பாளையம் செங்கல் சூளை பிரச்னைக்கு இதுவரை எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை; அரசு அனுமதியின்றி சூளைக்காகப் பல நூறு மீட்டர் ஆழத்திற்கு மண் எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபாடும், வனத்திலிருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட வன விலங்குகள் குழிக்குள் விழுந்து உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. இவைகள் சரி செய்யப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.
தொண்டாமுத்தூர்: உயர்கல்வித் தொட்டில் எனச் செல்லும் அளவுக்கு, தொண்டாமுத்தூர் புறநகரில் பாரதியார் கல்கலைகழகம், அண்ணா பல்கலைகழகம், காருண்யா பல்கலைகழகம், சட்டக்கல்லூரி, அரசு கலைக் கல்லூரி என முக்கியமான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. கோவையின் பிரபல சுற்றுலாத் தளங்களும், இந்த தொகுதியில் தான் உள்ளன.
கோவைக் குற்றாலம், சுற்றுலாத் தளமாக வளர்ந்து வரும் ஈஷா யோகா மையம், ஆதியோகி சிலை இந்த தொகுயில் தான் உள்ளன. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட, பேரூர் பட்டீஸ்வரம் கோயில் இந்த தொகுதியில் உள்ள பழம் பெரும் ஆன்மீக தளம்.
இத்தொகுதியின் முக்கிய நீர் ஆதாரம் நொய்யல் ஆறு. மேற்கு தொடர்ச்சி மலையில், சிறுவாணி மலைப்பகுதியின் கிழக்குச் சரிவுகளில் 7 ஓடைகள் ஒன்று சேர்ந்து நொய்யல் ஆறாக 180 கி.மீ., பயணித்து, கரூர் மாவட்டம் நொய்யல் கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது.
இந்தத் தொகுதியில் முக்கிய தொழில் விவசாயம்; வேதனையும் அதுவே. வனப்பகுதியை ஒட்டிய விவாசய நிலங்களில் காட்டு பன்றிகளின் தொல்லைக்குத் தீர்வு காணப்படவில்லை. அதே போல மனித - காட்டு உயிர் மோதலில் இந்த பகுதிகளில் தான் அதிகம். தற்போது இந்தப் பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
சிங்காநல்லூர்: கோவை மாவட்டத்தில் தொழிலாளர்கள் அதிகளவில் இருப்பது சிங்காநல்லூர் தொகுதியில் தான். சிறு குறு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் அதிகம் உள்ள பகுதி இது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எஸ்.ஐ.எஸ்.ஹெச் காலனி பகுதியில் அமைந்துள்ள மேம்பாலம் கட்டுமான பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட காரணமாக இருந்த பஞ்சாலைகள் கடும் தொழில் நெருக்கடியைச் சந்தித்துள்ளன.
இதற்குத் தீர்வு காணவோ முடிவுக்கு கொண்டு வரவோ, அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் பாதியில் நிற்கின்றன. பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு பொது மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்து வந்த நிலையில். எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் குடிநீர் வழங்கும் உரிமை சூயஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக, தொகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, நகர்ப்புற பகுதிகளில் 36 வார்டுகளும், சுற்றுவட்டார பகுதியில் கிராமப்புறங்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் தென்னை விவசாயத்திற்குப் புகழ்பெற்றது. இங்கிருந்து இளநீர் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நகர்ப்புறப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தாமதமாக நடைபெற்று வருவது, முக்கிய சாலைகள் தோண்டப்பட்டு போக்குவரத்துக்கு இடையூராகத் தொகுதியின் பெரும் பிரச்னையாகவுள்ளன. தொடர்ந்து அதிமுகவின் வசம் இருந்து வந்த இந்தத் தொகுதி, தற்போது அந்த நிலையை இழக்கலாம் என்றும், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் அதற்கு அடிகோல போகிறது என்றும், அரசியல் பட்சிகள் ஆரூடம் கூறுகின்றன.
கிணத்துக்கடவு: பொள்ளாச்சியை அடுத்துள்ள தொகுதி என்பதால் இந்தத் தொகுதியிலும் தென்னை விவசாயமே பிரதான தொழில். தொகுதியின் முக்கிய பிரச்னையாக குடிநீர் தேவை உள்ளது. தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியான வேலந்தாவளம் பகுதியின் குடிநீர் தேவைத் தீர்க்கப்படாமலேயே உள்ளது. இந்த தொகுதியில் உள்ள வெள்ளலூர் பகுதியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கு இத்தொகுதியின் தீராத பிரச்னையாக உள்ளது. பலநூறு ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குப்பைக்கிடங்கில் மாநகராட்சியின் 100 வார்டுகளின் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுற்று வட்டாரப்பகுதி மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. அதே போல மதுக்கரையில் அமைந்துள்ள சிமெண்ட் ஆலையால் சுற்றுச்சூழல், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளதாக கூறப்படுகிறது.
வால்பாறை (தனி): கோவை மாவட்டத்தில் உள்ள தனி தொகுதியான வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 48 ஆயிரம் பேரும், கீழ்புறம் ஆனைமலை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ஒன்னே முக்கால் லட்சம் மக்களும் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆனைமலை பகுதிகள் விவசாய நிறைந்த பூமி என்பதால், விளைபொருட்களை வாங்குவதற்கு அரசு கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும், வால்பாறையைச் சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும், தோட்டத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும், மனித - காட்டு உயிர் மோதல்களைத் தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் என்பன இத்தொகுதி மக்களின் நீண்ட கால, பிரதான கோரிக்கையாகும்.
களநிலவரம்
மாவட்டத்தின் 10 தொகுதிகளில், 9 இல் அதிமுக வெற்றி பெற்றுள்ளது, சிங்காநல்லூர் தொகுதியை மட்டும் திமுக கைப்பற்றியுள்ளது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி இந்த மாவட்டத்தைச் சேரந்தவர் என்றாலும், தொகுதிகளில் நடைபெறும் நலத்திட்டங்களில், இவரது அண்ணனின் தலையீடும், அமைச்சரின் உறவினர்களின் பெயரில் அரசு டெண்டர்கள் எடுக்கப்படுவதும் தொகுதி மக்களிடம் எதிர்ப்பு உணர்வையும், அதிமுக பற்றிய அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தில் முடிக்கப்படாமல் உள்ள மேம்பால பணிகள், குடிநீர் விநியோகத்தைத் தனியாரிடம் ஒப்படைத்தது என பல விசயங்கள் ஆளும் கட்சிக்கு எதிராகவுள்ளன. பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரம் இந்தத் தேர்தலில் பெறும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் அதிமுக வசமுள்ள இந்த கொங்கு மண்டலத் தொகுதியின் கணிசமான இடங்களில் இந்த முறை திமுக காலூன்ற வாய்ப்புள்ளது.