வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், திமுக வேட்பாளராக கார்த்திகேய சிவசேனாபதியும் போட்டியிடுகின்றனர். இருவரும் வேட்புமனு தாக்கல்செய்த நிலையில், இன்று அனைத்துத் தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி பேரூர் தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரைச் சந்தித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேட்புமனு தாக்கல் செய்ததில் சொத்து கணக்கு, வருமானம் தொடர்பான ஆவணங்களை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை என்று புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திகேய சிவசேனாபதி, “என்னுடைய வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதே சமயம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விண்ணப்பத்தில் பல்வேறு குறைபாடுகளும், பொய்களும் உள்ளன. எனவே, வேலுமணியின் வேட்புமனுவை தேர்தல் அலுவலர்கள் பரிசீலனை செய்து அதனை நிராகரிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் அளித்துள்ளோம்.
எஸ்.பி. வேலுமணி 2016 - 2017ஆம் ஆண்டு வருமானத்தில் அவரது பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான அத்தாட்சி கிடையாது. அவருடைய மனைவியின் வருமானமும் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.
இல்லத்தரசி என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் பொழுது ஒரே ஆண்டில் எப்படி 70 லட்சம் ரூபாய் வந்தது என்று தெரியவில்லை. இதற்குத் தகுந்த பதிலை தேர்தல் ஆணையம் தரவில்லை. ஒருதலைபட்சமாகத் தேர்தல் ஆணையம் நடந்துகொள்வது வருத்தம் அளிக்கிறது.
அதேபோல் வேலுமணியின் மகன் தனியார் ஹெலிகாப்டர்களில் பல்வேறு நாடுகளில் சுற்றிவருகிறார். எந்தவித வருமானமும் இல்லாமல் எப்படி ஹெலிகாப்டரில் சுற்ற முடியும்?
எந்தவித வருமானமும் இல்லாமல் ஹெலிகாப்டர்களில் சுற்றுவது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தொண்டாமுத்தூர் மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...இது திராவிட மண், மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்குப் பலிக்காது - ஸ்டாலின்