கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் அரசு மருத்துவமனையில் அன்னூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். கரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகியோரை நேரில் சென்று கையெடுத்து கும்பிட்டு, அவர்கள் செய்துவரும் சேவைக்கு நினைவு பாராட்டி அனைவருக்கும் அமைச்சர் சாமிநாதன் நன்றி தெரிவித்தார்.
“ஒன்றிணைவோம் வா”
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தனியார் மருத்துவமனைகளில் கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பதாக பல புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து உரிய அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்டணம் முறைபடுத்தப்படும். ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது கரோனா பாதிப்பு குறித்து ஆராய்ந்து அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த தளர்வுகளை முறையாக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அரசு ஊரடங்கு தளர்வுகளை மறுபரிசீலனை செய்ய நேரிடும். தேர்தலுக்கு முன்பே 'ஒன்றிணைவோம் வா' என்னும் திட்டத்தில் மு.க.ஸ்டாலின் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி கட்சியினரை அறிவுறுத்தியிருந்தார்.
ஏழை, எளிய மக்களுக்கு உதவி
தற்போது அன்னூர் வட்டாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், வறுமையில் வாடுவோர் உள்ளிட்டோருக்கு அரிசி, மளிகை, காய்கறி பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்பேரில், ஊரடங்கு காரணமாக வேலையிழந்து, வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை, எளிய மக்களுக்கு இதுபோல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. செய்தி மற்றும் விளம்பரத்துறையில் முதலமைச்சருடைய அறிவுறுத்தலின் பேரில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.