தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற 168 பெண்கள் உட்பட 550 வன காப்பாளர்கள், 45 டிரைவர்கள் ஆகியோருக்கு கோவையில் உள்ள வன உயர் பயிற்சியகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆறு மாதமாக நடைபெற்ற இப்பயிற்சியில் தீ தடுப்பு, மனித விலங்குகள் மோதல் தடுப்பு, நீர் மேலாண்மை, யோகா, வாகனம் ஓட்டுதல் , நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மேலும், வன காப்பாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள புலிகள் காப்பகம் மற்றும் வன ஆராய்ச்சி நிலையங்கள், வன தோட்டங்கள், சதுப்பு நில காடுகள் என வனப்பகுதிகளில் 15 நாட்கள் தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் 550 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் விழா கோவை தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு வன காப்பாளர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதனைதொடர்ந்து பயிற்சி பெற்ற வனக்காப்பாளர்கள் செய்த சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டு பேசிய
முதலமைச்சர், "வனத்துறையை பொறுத்தவரை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது. தமிழ்நாட்டின் வன பரப்பளவு தற்போது 20.21 விழுக்காடாக இருக்கின்றது. இதனை 33 விழுக்காடாக மாற்றும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
2021ஆம் ஆண்டுக்குள் 71 லட்சம் மரக்கன்றுகளை நடவேண்டும் என்ற இலக்கோடு இந்த அரசு செயல்படுகிறது. வனத்துறை பணியில் ஈடுபட இருக்கும் வனக்காப்பாளர்களுக்கு வனம் சார்ந்த பல்வேறு பணிகள் காத்திருக்கின்றன. அதற்கு தயாராக நீங்கள் இருக்க வேண்டும்.
சென்னையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்னும் அரிய வகை பறவைகள், விலங்குகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் " என்றார்.
இதையும் படிங்க: நதிநீர்ப் பங்கீடு - தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்கள் சந்திப்பு!