கோவை: நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, நேற்று (ஆக.15) தமிழகத்தில் அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை கோட்டூர்-ஆழியார் சாலையில் பார் ஒன்றில் மதுவைப் பதுக்கிக் கூடுதல் விலைக்கு விற்பதாக கோட்டூர் கிராம நிர்வாக அலுவலர் சித்தேஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் சென்று ஆய்வு செய்தார். அப்போது மது விற்பனை செய்த மூவரை அவர் எச்சரித்தார். தொடர்ந்து அந்த மூவரும் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்து இருசக்கர வாகனம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டனர்.
இது குறித்து அவர், கோட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் மது விற்பனை செய்த தேவகோட்டையை சேர்ந்த டேமின் லியோவை கைது செய்தனர். மேலும், கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆனைமலை தாசில்தார் பாருக்கு சீல் வைத்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அமைதியான முறையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்கள்