தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்துவரும் நகரங்களில் ஒன்றான கோவையில் பல சிறப்பம்சங்களைக் கொண்ட அரசு மருத்துவமனையும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. நாள்தோறும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இங்கு குழந்தைகளுக்கென்று தனியாக 'ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையம்' என்ற சிறப்பு வார்டும் செயல்படுகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் கோவை தனியார் கல்லூரி மாணவர்களும், சந்திரன் சிவா பவுண்டேஷன் உறுப்பினர்களும் இணைந்து நாள்தோறும் பரபரப்பான மருத்துவமனை சூழலைப் பார்த்து விரக்தியடையும் குழந்தைகளுக்கு உற்சாகமூட்ட முடிவுசெய்தனர்.
மருத்துவமனையில் அமைந்துள்ள சுவரை வெறும் சுவராகக் காட்டாமல், உற்சாகம் தரும் சுவராகக் காட்ட விரும்பினர். அதனால் குழந்தைகள் வார்டு கட்டடம் முழுவதும் பல வண்ண ஓவியங்களை வரைந்தனர்.
குறிப்பாகக் குழந்தைகளைக் கவரும்வண்ணம் மினியன், டிவிட்டி, நீமோ, ஆங்ரி பேர்டு போன்ற கார்ட்டூன் ஓவியங்களையும் அவர்களுக்கு விழிப்புணர்வு தரும்விதமாக மரம் நடுதல், குப்பைத்தொட்டி பயன்படுத்துதல் போன்ற ஓவியங்களையும் வரைந்து சுவரை அழகாக்கினர்.
அதுமட்டுமல்லாமல் கால்பந்து, கராத்தே, சறுக்கி விளையாடுதல் போன்ற காட்சிகளை வரைந்து 'ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா' என்று நோயால் அவதிப்படும் குழந்தைகளை விளையாட உற்சாகப்படுத்தினர்.
இது குறித்து கூறிய சந்திரன் சிவா பவுண்டேஷன் தலைவர் சசிகலா, "கோவை அரசு மருத்துவமனையில் சுத்தம் சரிவர இருக்காது என்று மக்கள் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதை முறியடிக்கும் வகையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இதை இன்னும் பல்வேறு வார்டுகளிலும் அமல்படுத்த உள்ளோம். இதனால் கோவை அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைக்கு நிகராக வலுப்பெறும்" என்றார்.
இது குறித்து கல்லூரி மாணவர் தினேஷ் கூறுகையில், "குழந்தைகள் அனைவரும் இந்த வார்டில் நோய்வாய்ப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிவருகின்றனர். அவர்களுக்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்தும்வகையில் நாங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் நோயாளிகள் பயன்பெறும் வகையில் இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறோம்" என்று கூறினார்.
பின்னர் பேசிய கோவை அரசு மருத்துவமனை கல்லூரி முதல்வர் அசோகன், "இதுபோன்ற ஓவியங்கள் குழந்தைகளிடம் பெரும் வரவேற்பைப் பெறும். இதன்மூலம் மன ரீதியாக குழந்தைகள் குணமடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இன்பினிட்டி பார்க்' - மாற்றுத்திறனாளி சிறுவர்களின் உலகம்!