கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் உள்ள ஆச்சிப்பட்டி ஊராட்சியில் சேரன் நகர், பாலாஜி நகர் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் விதத்தில் ரூ.10 லட்சம் செலவில் நியாய விலைக்கடை கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராமன், 'எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு அரசின் மீதும், முதலமைச்சர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். இதுவரை கரோனா தொற்று பரவிய காலத்திலிருந்து வீட்டை விட்டு வெளியே வராமல் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்ளும் ஸ்டாலின், சொந்த ஊடகங்கள் மூலம் தமிழ்நாடு அரசின் மீது தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்.
முதலமைச்சர் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் கார் மூலம் கோவை, திருச்சி மாவட்டங்களுக்குச் சென்று கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் மாவட்டம்தோறும் கார் மூலம் செல்ல உள்ளார். அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்ட மனமில்லாமல், எதிர்க்கட்சியினர் குற்றங்களைக் கூறி வருகின்றனர்.
முதலமைச்சர் மீது குற்றங்களைக் கூறிவரும், ஸ்டாலின் கூறும் கருத்துகளை நாட்டு மக்கள் பொருட்படுத்துவதில்லை.
மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இணைந்து பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சியினர் தவறான செய்திகளைப் பரப்பி அரசியல் ஆதாயம் தேடி வருகின்றனர்' என்று கடுமையாக சாடியுள்ளார்.